பழைய நாடகங்களில் மன்னன் மந்திரியைப் பார்த்து கேட்பான் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று. நாட்டிலே மழை பெய்ததா இல்லையா என்று கூடத் தெரியாமல் இவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்று சிரிப்பு வரும். அண்மையில் லண்டனில் கூடிய சில தமிழர்கள் மகிந்தவின் நூற்றுக் கணக்கான மந்திரிகளில் ஒருவரான திஸ்ஸ விதாரணவை இந்த வகையான சில கேள்விகள் கேட்டார்கள்.
பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றார்கள்; இலட்சக்கணக்கான மக்களைச் சிறை முகாம்களில் வைத்திருக்கிறார்கள். தமிழர் தாய்நிலம் முழுவதும் இராணுவக் காட்டாட்சி நடக்கிறது. முழு இலங்கைப் பொருளாதாரத்தையே தமது ஊழல்களிற்காக வல்லரசுகளின் வேட்டை நிலமாக்குகிறார்கள். ஆனால் இந்த தமிழ் மன்னர்கள் கொலைகாரக் கும்பலின் மந்திரியிடம் கேட்கிறார்கள் தமிழ் மக்களிற்கு என்ன தீர்வு தரப் போகிறீர்கள் என்று. வன்னி மக்களை அவர்களது மண்ணிலேயே வாழ விடுவதற்கு பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் இவர்களிடம் தமிழ் மக்கள் கேட்பதற்கு எதுவுமில்லை.
இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு பகுதியினர் மக்களின் அரசியல், பொருளாதார உரிமைகளை பேரினவாத அரசுகளுடன் இணைந்து பெற்றுக் கொள்வோம் என்று மக்களை நம்பச் சொன்னார்கள். இன்று புலம்பெயர் நாடுகளில் சிலர் தாம் மகிந்தவின் கால்களைக் கழுவுவதன் மூலம் முகாம்களில் இருக்கும் மக்களின் கண்ணீரைத் துடைத்து விடுவோம் என்று கதை அளக்கிறார்கள்.
சில ஆயிரம் புலிகளை, ஒரு நாட்டினது முழு வளங்களுடன், வெளிநாட்டு சக்திகளின் பெருக் உதவிகளுடன், இலட்சக் கணக்கான இராணுவத்தைக் கொண்டு அழித்து விட்டு, வீர வசனம் பேசும் மகிந்தவிடம், புலிகள் இல்லையென்றால் மக்களை வன்னி மண்ணிலே மறுபடியும் வாழ விடுவதற்கு என்ன தடை என இவர்களால் கேட்க முடியவில்லை.
ஆயிரக் கணக்கான மக்களைக் கொன்றவன் சொல்கிறான், வன்னி மண்ணிலே புதைக்கப் பட்டுள்ள கண்ணி வெடிகளால் மக்கள் ஊனமாகி விடுவார்களாம். அவர்கள் மேல் கொண்ட கருணையினால் அவர்களை இப்போது விட முடியாதாம். வன்னி மண்ணிலே கொன்று குவிக்கப் பட்ட மக்களினதும் போராளிகளினதும் உடல்கள், ஆதாரங்கள் மறைக்கப் பட வேண்டுமென்பதனாலேயே இக்கும்பல்களினால் மக்களை விட முடியவில்லை.
வன்னிப் போர் முடிந்தவுடனேயே இந்திய விவசாயிகளை இலட்சக் கணக்கில் தற்கொலைக்குத் தள்ளி விட்ட மேல் நாட்டு பெரும் முதலாளித்துவ நிறுவனங்களின் செயற்கை உரங்களினால் பசுமைப் புரட்சி செய்த சுவாமிநாதன் மகிந்தவைச் சந்தித்தார். வன்னி நிலப் பரப்பை இந்திய முதலாளிகளிற்கு அடகு வைப்பதற்காகவே இந்தச் சுத்திகரிப்பு நடந்தது. வியட்னாம், உக்ரெய்ன் போன்ற நாடுகளின் விவசாய நிலங்களை சீனாவும் மேற்கு நாடுகளும் தமதாக்கிக் கொள்வது போலவே இந்திய முதலாளிகளும் வன்னி மண்ணை விலைக்கு வாங்கப் போகிறார்கள். இதற்காகவே மக்களைப் பெருந்தொகையாகக் கொன்றும் முகாம்களில் சிறை வைத்தும் மக்களின் நிலங்களை மகிந்த கும்பல் களவு செய்கிறது.
அலெக்சாண்டர் குப்ரின் ரஷ்ய மொழியில் எழுதிய பலிபீடம் புதுமைப்பித்தனின் எள்ளல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அதில் விபச்சார விடுதி நடத்தும் பெண்ணும் அவளிடம் இலஞ்சம் வாங்க வந்த பொலீஸ்காரனும் பேசிக் கொள்வார்கள்; "காலம் எப்படி போகுது பார்த்தீர்களா? எங்கு பார்த்தாலும் மோசடி, ஊழல், ஒழுக்கம் சீர்குலைந்து வருகிறது. இந்த பெண்களிற்கெல்லாம் (விடுதியில் இருக்கின்ற) வேலையைப் பற்றி கொஞ்சமும் அக்கறை கிடையாது". அது போல் திஸ்ஸ விதாரண தனது கூட்டத்திற்கு வந்தவர்களிடம் நீங்கள் புலிகளிற்கு உதவி செய்தீர்கள், இப்போது வன்னி முகாம்களிற்கு உதவவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார். அவரின் இலவச இணைப்பாக சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தரகு வேலை செய்து இப்போது இலண்டன் வந்திருக்கும் அம்சாவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் தனது பங்கிற்கு வெளிநாட்டு சேவை நிறுவனங்கள் வன்னி முகாம்களில் வேலை செய்கின்றன. BBC போன்ற செய்தி நிறுவனங்களை அனுமதித்துள்ளோம், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார்கள்.
திஸ்ஸ விதாரண இடது சாரியாம், சர்வதேசியவாதியாம் இவர் எப்படி மகிந்தவுடன் சேர்ந்தார் என்று இந்தப் பச்சைக் குழந்தைகள் வாயிலே வைத்துச் சூப்பியபடி கேட்கிறார்கள். மந்திரிப் பதவி, பணம் என்றவுடன் பல்லைக் காட்டிக் கொண்டு சேர்ந்தார் என்று இந்தப் பாலகர்களுக்குத் தெரியவில்லையாம். கூட்டத்திலிருந்து ஆக்கபூர்வமான விமர்சனங்கள், கேள்விகள் வர வேண்டுமென விதாரண கேட்டுக் கொண்டாராம். இலங்கையில் கொலையுண்ட ஊடகவியலாளர்களால் இப்படியான ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைக்க முடியாமல் போனதால் தான் மகிந்த குடும்பத்தால் கொலை செய்யப் பட்டார்கள் போலும்.
தமிழ் மக்களது உழைப்பிலும் உதிரத்திலும் வளர்ந்த சுதந்திரப் பயிரை இந்தக் கொலைகாரக் கும்பலினால் அழித்து விடமுடியாது. தமிழ் மக்கள் தமது கணக்குகளை தீர்க்கும் நாளில் இந்தக் கொலைகாரக் கும்பலை குற்றவாளிக் கூண்டிலேற்றி கேட்பதற்கு மட்டுமே கேள்விகள் இருக்கின்றன.