தேசியம் எண்ணிக்கையல்ல அதுவொரு பண்புநிலை – ரீட்டா 

Posted by நிலவன் Sunday, September 27, 2009 8:13:02 AM
Rate this Content 1 Votes

விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பு அழித்தொழிக்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தின் மற்றுமொரு கட்டம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதுடன் தமிழ்த் தேசியத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக ஒரு மாயையை உருவாக்கி விட சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக முயன்று வருகின்றது. தமிழ்த் தேசியத்தின் ஆழமான வேர் சிங்கள பெளத்த பேரினவாத்தின் விளைவு என்பதில் நன்கு தெளிவாக உள்ள சிறிலங்கா ஆளுங்குழுமம் தமிழ்த் தேசியவாதம் மீளவும் தலை தூக்காதவாறு செய்வதில் மிகுந்த பிரக்ஞையுடன் ஓயாது செயற்பட்டு வருகின்றது.

1972ம் ஆண்டு சிங்கள அரசியல் சாசனத்தின் விளைவு வட்டுக் கோட்டை தனியான தமிழீழம் தனியரசு என்ற தீர்மானம் ஆகும். அன்று தொட்டு தமிழ்த் தேசியத்தின் அரசுருவாக்கத்திற்கு ஆதாரமாக அமையவிருந்த நிலப்பரப்பினைத் துண்டாடுவதை சிங்கள அரசு மிகவும் திட்டவட்டமாகச் மேற்கொண்டு வந்தது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுவியதுடன் அவற்றைக் காலத்திற்குக் காலம் விசாலப்படுத்திக் கொண்டமை இதன் பிரதான அம்சமாகும். இதனூடாக் தமிழ் முஸ்லிம் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் அவர்களின் வீதாசார செறிவினைக் குறைத்து வந்தமை இரண்டாவது பிரதான அம்சமாகும். இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட பல்வேறு திட்டமிட்ட ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளின் விளைவுதான் கூர்மையுற்ற தமிழ்த்தேசியமும் விடுதலைப் போராட்டமும் இறுதிக் கட்டமாக ஆயுதப்போராட்டமும் ஆகும்.

முப்பது வருடங்களாக நடைபெற்று வந்த ஆயுதப் போராட்டம் அதன் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளால் கையகப்படுத்தப்பட்டு முரட்டுத் தனமாக முன்னெடுக்கப்பட்டு, பல்வேறு இராணுவ சாதனைகள் அடையப்பட்டு அதன் உள்ளாந்த அரசியல் பலவீனம் காரணமாக இன்று சிங்கள அரசினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தோற்கடிக்கப்பட்டும் கூட சிங்கள அரசிற்கு தமிழ்த் தேசியம் குறித்த அச்சம் அகன்று விடவில்லை.இதற்கான ஊற்று மூலம் தனது மேலாதிக்கப் போக்குத்தான் என்பது அவர்களுக்குத் தெளிவு என்பதுதான இதற்குக் காரணமாகும்.
தமிழ்த்தேசியம் மாத்திரமல்ல வேறெந்த தேசியங்களும் கூட சிறிலங்காவில் தலையெடுக்க விடக் கூடாது என்ற நோக்கில் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு இன்று மேற்கொண்டு வருகின்றது. இந்த நடவடிக்கைகள் பெளதிக ரீதியிலும் கருத்தியல் ரீதியிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

Queue
 

சிறிலங்கா அரசினாலும் அதன் நிலைத்தலுக்காக வாதாடும் அரசியல் நிபுணர்களாலும் தற்போது புதிய வாதமொன்று முன்வைக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியம் தனக்கென ஒரு அரசினை உருவாக்கி அதன் ஆள்புல எல்லையாக அமையக் கோரும் தாயக நிலப்பரப்பில் தமிழ் மக்கள் சொற்ப அளவில் இருப்பதாகவும் தாயகத்திற்கு வெளியில் அதனை விட அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் எனவே தனியான அரசிற்கான அடித்தளம் இப்போது கிடையவே கிடையாது எனவும் வாதிடப்படுகின்றது.

“பெரும்பான்மை” எனும் எண்ணிக்கை வகைப்பட்ட எண்ணக் கருவின் மீது தனது ஆதிக்கத்தை நிறுவிக் கொண்ட சிங்கள ஆழுங்குழுமமானது தேசியம், தேசம் என்ற பண்புநிலை சார் எண்ணக்கருவினை சற்றேனும் விளங்கிக் கொள்வதாக இல்லை அல்லது வேண்டுமென்றே விளங்க மறுக்கின்றது.

பலஸ்தீன மக்கள் தமது பாரம்பரியப் பிரதேசங்களில் இருந்து பலவந்தமாக கிட்டத்தட்ட முற்று முழுதாக வெளியேற்றப்பட்ட பின்பும் கூட அவர்களின் தேசிய உணர்வானது பல வருடங்கள் நீடித்து நிலைத்து இறுதியில் சில குறைபாடுகளுடன் என்றாலும் ஒரு தனியான அரசினை நிறுவிக் கொண்டனர். இதைவிடப் பொருத்தான உதாரணம் வேறென்ன வேண்டும். இங்கு இரண்டு விடயங்கள் முக்கியமானதாகும். ஓன்று தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசத்திலிருந்து சுய விருப்புடன் வெளியேறவில்லை. அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் இன அழிப்பின் பல்வேறு வடிவங்களைத் தாங்க முடியாது வெளியேறினார்கள். இரண்டாவதாக, அவர்கள் அவ்வாறாக வெளியேறி தென்னிலங்கையிலும் தமிழ் நாட்டிலும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் வதிகின்ற போதிலும் அவர்களின் தேசிய உணர்வும், தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற அவாவும் வற்றி விடவில்லை. பல்வேறு விதங்களில் இந்த தேசிய உணர்வு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு தொடக்கம் 22 வருடங்களாக நிலவிய விடுதலைப் புலிகளின் மேலாதிக்க அரசியல் போக்கில் உடன்பாடு இல்லாத பலரும் கூட விடுதலைப் புலிகள் அமைப்பின் எதிரி நோக்கிய செயற்பாடுகளில் உட்கூறாகக் கிடந்த தேசிய அம்சத்தை ஆதரித்து வந்தமைக்குக் காரணம் தமக்குள் பொதிந்து கிடந்த தேசிய வேட்கைதான். தேசிய உணர்விற்கு நில எல்லை கிடையாது. நிலம் என்பது வெறும் ஆள்புல எல்லைதான். அது துண்டாடப்பட முடியும் குறுக்கப்பட முடியும், விஸ்தரிக்கப்படவும் முடியும். மற்றப்படி இது ஒரு உணர்வு சார்ந்த ஆழமான அரசியல் பிடிப்பாகும். நிலப் பிரதேசம் என்ற பெளதிக அம்சத்தையும் கடந்த அரசியல் வகையினமாகும்.

எண்ணிக்கைச் செறிவினைக் குறைத்து விட்டால் தமிழ்த் தேசிய அவாவிற்கு ஒரு முற்றுப் புள்ளியை வைத்து விடலாம் என்ற சிங்கள மேலாதிக்க அரசியலின் முட்டாள்தானமான கணக்கின் விளைவே இது. இன்னமும் கூட சிங்கள் மேலதிக்க சக்திகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வெளியேற்றப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களை அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களிற்கு மீளத் திரும்பி சுதந்திரமாக வாழ்வதற்கு எந்தவித கொள்கை வகுப்புகளும் செய்யாது அர்ததமுள்ள நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது மறுபடியும் அந்நிய ஆதரவுடன் கூடிய இராணுவ வலிமையினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்த் தாயகப் பிரதேசங்களில் புதிய புதிய சிங்கள ஊடுருவலை மேற்கொள்வதிலும் அங்கெல்லாம் தமது அடிவருடிகளின் துணையுடன் சிங்கள மேலத்தினை நிறுவுவதிலும் குறியாகச் செயற்பட்டு வருகின்றனர்.
ஆக தமிழ்த் தேசியமும் உண்மையான தமிழ்த்தேசிய சக்திகளும் சிங்கள மேலதிக்கத்தினை நோக்கி ஒரு தெளிவான செய்தியினை விடுக்கின்றது. தமிழ் மக்களின் எண்ணிக்கைச் செறிவினை நீங்கள் பத்தில் ஒன்றாகக் குறைத்தாலும் ஏன் அதற்கும் மேலாக தமிழ்த் தாயகத்தில் குறைத்தாலும் கூட சிங்கள அரசினதும் அதன் இராணுவ இயத்தினதும் முழுமையான ஒத்துழைப்புடன் நீங்கள் மேற்கொண்டு வரும் மேலாதிக்கப் போக்கு இருக்கும் வரை அனைத்து மக்களும் சமத்துவமாக பேணப்படும் ஒரு உன்னதமான அரசியல் நடைமுறை இல்லாத வரை தமிழ்த் தேசியத்தை ஒரு சொட்டும் பலவீனப்படுத்தி விட முடியாது.

மீண்டும் மார்க்சிய சொல்லாடலில் கூறினால் சக தேசியங்களை அடக்கியாண்டு கொண்டு நீங்கள் மாத்திரம் சுதந்திரமாக நிம்மதியாக இருந்து விடமுடியாது. பிறர் மீது விதிக்கப்படும் அடிமைச் சங்கிலி உங்களுக்கு நீங்களே போட்டுக் கொள்ளும் அடிமைச் சங்கிலிதான்.

re: தேசியம் எண்ணிக்கையல்ல அதுவொரு பண்புநிலை – ரீட்டா

Sunday, November 22, 2009 7:57:24 AM Dark

தமிழ் மக்களின் எண்ணிக்கைச் செறிவினை நீங்கள் பத்தில் ஒன்றாகக் குறைத்தாலும் ஏன் அதற்கும் மேலாக தமிழ்த் தாயகத்தில் குறைத்தாலும் கூட சிங்கள அரசினதும் அதன் இராணுவ இயத்தினதும் முழுமையான ஒத்துழைப்புடன் நீங்கள் மேற்கொண்டு வரும் மேலாதிக்கப் போக்கு இருக்கும் வரை அனைத்து மக்களும் சமத்துவமாக பேணப்படும் ஒரு உன்னதமான அரசியல் நடைமுறை இல்லாத வரை தமிழ்த் தேசியத்தை ஒரு சொட்டும் பலவீனப்படுத்தி விட முடியாது.

தமிழ் தேசியத்தின் தார்மீக பலத்தினை இது ஆட்டங்காண வைக்க முடியாதென்றாலும் சிறுபான்மையினர் மத்தியில் ஒரு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி விட வாய்ப்புள்ளதென்பதை மறுக்க முடியாது. "சிங்கள அரசு" போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் நம்மை மேலும் அந்நியப் படுத்தவே உதவும்.


re: தேசியம் எண்ணிக்கையல்ல அதுவொரு பண்புநிலை – ரீட்டா

Thursday, October 08, 2009 12:12:21 AM amalan

பாலஸ்தீனம் போன்று இன்னொரு உதாரணம் உள்ளது. பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கையினை விட இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் விடுதலை அடைவதை இது என்ன வகையில் தடுத்தது.


Comments are closed on this post.