இந்திய எதிர்ப்பு அரசியலும் ஈழத் தமிழர் போராட்டமும் - பிரம்மா 

Posted by நிலவன் Tuesday, September 29, 2009 1:41:05 PM
Rate this Content 5 Votes

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டு அல்லது இந்தியா இலங்கை அரசியலில் நேரடியா தலையீட்டு 22 வருடங்கள் ஆகின்றன. இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் ஜந்து அம்ச கோரிக்கைகளை முன்நிறுத்தி சாத்வீக ரீதியாக போராடி உயிர்நீத்த தியாகி தலீபனின் 22வது வருடத்தை நினைவு கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் நமது அரசியல் முன்னெடுப்புகளில் நாம் தவிர்த்துச் செல்ல முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கும் இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்தும் இதில் நமது நிலைப்பாடு எவ்வாறு அமையலாம் என்பது குறித்தும் சிறிது அவதானிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

இன்று நாம் ஒரு மிகவும் இக்கட்டான முட்டுச் சந்தியில் நிற்கிறோம் என்பதில் எவருக்குமே கருத்து பேதங்கள் இருக்கமாட்டாது. இவ்வாறானதொரு நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதற்கு இன்று பலரும் பலவாறான கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். இதற்கு புலிகளின் எதேச்சாதிகார அரசியலே பிரதான காரணம் என்போர் அதற்கான காரணங்களை அடுக்கிச் செல்கின்றனர். இல்லை இன்றைய உலக அரசியல் ஒழுங்கை சரியாக விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப அரசியலை கையாளும் திறன் புலிகளிடம் இல்லாததே இன்றைய அவலத்திற்கு காரணம் என்பது பிறிதொரு தரப்பினரது வாதம். இவைகளை விட்டுவிடுவோம் இதனை ஒட்டுமொத்த தமிழர்களின் தோல்வியாகக் கருதி அடுத்த கட்டம் பற்றி சிந்திக்க வேண்டியதே இன்றைய சூழலில் நமது கடப்பாடாகும் என்பது இன்னொரு சாராரது நிலைப்பாடு. என்னளவில் முன்றாவது தரப்பினரின் நிலைப்பாடே சரியானது என்பேன். இதற்காக விமர்சனங்கள், மீள்பார்வை தேவையில்லை என்பதல்ல அர்த்தம். அவைகள் தேவை, எந்த இடத்தில் நாம் தடுக்கி விழுந்திருக்கிறோம்? எந்த இடத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாதிருந்திருக்கிறது? புதிய பலமையங்களுக்கிடையிலான உறவு-முரண்களை எம்மால் சரியாக புரிந்து கொள்ள முடிந்ததா? இப்படியான உரையாடல்கள் நமக்கு தேவை ஆனால் விமர்சனங்களை தனிப்பட்ட குரோதங்களாக மாற்றிவிடும் எழுத்துக்கள் நமக்கு தேவையற்றது என்பதே எனது கருத்து. விடுதலைப்புலிகளும் கடந்தகாலம் குறித்த விமர்சனங்களை உள்வாங்கி சிந்திக்கும் அரசியல் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

கடந்த 30 வருட கால ஆயுதப் போராட்டத்தின் பண்பு வெளிப்பாட்டை துல்லியமாக மதிப்பிடுவோமானால் நமது அரசியல் உள்ளடக்கமாக இரண்டு விடயங்கள் இருந்து வந்திருப்பதை காணலாம், ஒன்று சிங்கள எதிர்ப்பரசியல் மற்றையது இந்திய எதிர்ப்பு அரசியல் இதனை பிறிதொரு வகையில் சொல்வதானால் நமது தமிழ்த் தேசிய விடுதலை அரசியல் இரு எதிர்ப்பு அரசியல் கூறுகளில் நிலை கொண்டிருக்கிறது, ஆரம்பத்தில் தமிழ்த் தேசியத்திற்கான ஒரு பக்கத்துணை சக்தியாகவே இந்தியா பார்க்கப்பட்டது எனினும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து ஏற்பட்ட அனுபவங்களின் பின்புலத்திலேயே இந்திய எதிர்ப்பு அரசியல் மனோபாவம் வளர்ந்து சென்றது. இந்தியா ஈழத் தமிழரின் தேசிய நலன்களுக்கு தடையாக இருக்கும் ஒரு நாடு என்ற வகையிலேயே நமது எதிர்ப்பரசியல் நியாயம் அமைந்திருந்தது ஆனால் நாம் ஒரு விடயத்தை இங்கு தெளிவாக பார்க்கலாம் சிங்களத்துடனான எமது முரண்பாடும் ஒரு பிராந்திய வல்லரசான இந்தியாவுடனான முரண்பாடும் அடிப்படையிலேயே வேறுபாடானது. இன்று இந்தியா நமது அரசியலில் தலையீடு செய்து 22 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் மீண்டும் நம்முன் தாண்டிச் செல்ல முடியாததொரு பெரும் சக்தியாக இந்தியாவே தென்படுகிறது. விடுதலைப்புலிகளின் இராணுவரீதியான தோல்விக்கு பின்னாலுள்ள மறைமுக கரம் இந்தியா என்பது இரகசியமான ஒன்றல்ல. தெற்காசிய அரசியல் நிகழ்சிநிரலிலிருந்து விடுதலைப்புலிகளின் ஒரு இராணுவ சக்தி என்ற அந்தஸ்த்தை முற்றாக துடைத்து அழிக்க வேண்டுமென்ற முடிவிலிருந்துதான் இந்தியா கொழும்பின் பின்னால் இருந்திருக்கிறது என்னும் முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது.

இந்த பின்புலத்தில் இனிவரும் காலங்களில் இந்தியாவை நாம் எவ்வாறு அணுகப் போகிறோம்? அதிகார மையங்களுக்கிடையிலான அரசியல் போட்டிக் களமாக மாறியிருக்கும் இன்றைய புதிய உலக அரசியல் ஒழுங்கில் நமது இந்திய எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் என்ன? தொடர்ந்தும் நடைமுறை சாத்தியமற்ற உணர்ச்சிகரமான அரசியல் சொல்லாடல்களுக்குள் சீவிக்கப் போகின்றோமா அல்லது நடைமுறைச் சாத்தியமான அரசியல் குறித்தும் அதற்கான அணுகுமுறைகள் குறித்தும் சிந்திக்கப் போகின்றோமா?

இப்படியான கேள்விகள் இன்றைய சூழலில் ஏன் நமக்கு அவசியப்படுகின்றன என்று இன்னுமொரு கேள்வியையும் இந்த இடத்தில் நாம் கேட்டுக் கொள்ளலாம். தனது பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலான அன்னிய சக்திகளின் தலையீடு இலங்கையில் அதிகரிக்கின்றது என்ற அச்சத்தின் காரணமாகவே இலங்கையின் உள் அரசியலுக்குள் இந்தியா நேரடியாக தலையிட்டது. ஆனால் அன்றிருந்த உலக அரசியல் இன்று இல்லை. அன்று அமெரிக்காவின் இலங்கை மீதான கரிசனைகளை அச்சுறுத்தலாக பார்த்த இந்தியா இன்று மூலோபாய ரீதியாக அமெரிக்காவுடனான நட்பு சக்தியாக இருக்கின்றது. அமெரிக்காவின் ஆசிய காய்நகர்த்தலுக்கான பிரதான சக்தியாக இன்று இந்தியாவே இருக்கிறது. அமெரிக்கா முன்னர் சோவியத்துக்கு எதிராக சீனாவை கையாண்டது போன்று இன்று சீனாவிற்கு எதிராக இந்தியாவை கையாளுகின்றது. அரசியலில் நிரந்தர நன்பர்களும் கிடையாது நிரந்தர எதிரிகளும் கிடையாது, மாறாதது நலன்கள் மட்டுமே. இந்த மாற்றங்களை கருத்தில் எடுக்காமல் இனிவருங்காலத்தில் நமது அரசியலை முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதா?

இந்தியா தனது நலன்களிலிருந்தே ஈழத் தமிழர் விவகாரத்தை கையாள முற்பட்டது என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவு உண்மை எந்தவொரு அதிகார சக்தியும் தனது நலன்களில் இருந்தே தனது பிராந்திய பரப்பினுள் அமையும் அரசியலை கையாளும் என்பதும். ஜே.ஆர் தலைமையிலான சிறிலங்கா அரசை தனது பிடிக்குள் இறுக்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த இந்தியா யூலை 83 இற்கு பின்னரான சூழலை சாதமாகப் பயன்படுத்திக் கொண்டது. இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களை நிரந்தரமாக கட்டுப்படுத்துவதற்கான ஒரு துருப்புச் சீட்டாக ஈழத் தமிழர்களை பயன்படுத்த எத்தணித்தது, இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழர் இயக்கங்களுக்கு பயிற்சியளிக்கும் முடிவையும் இந்தியா எடுத்தது. இதன் மூலம் கொழும்பிற்கு நெருக்கடிகளை கொடுப்பதே இந்தியாவின் திட்டமாக இருந்தது. அப்போது சிறிலங்கா இராணுவத்திற்கு இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பயிற்சியளித்துக் கொண்டிருந்தன என்பதையும் இங்கு குறித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிங்கள இராஜதந்திரம் இதில் நுட்பமாக பணியாற்றி ஈழத் தமிழர்களையும் இந்தியாவையும் பிரிக்கும் காய்நகர்த்தல்களில் வெற்றிபெற்றது. இந்தியா, அமைதிப்படை என்ற பெயரில் இங்கையினுள் பிரவேசித்தாலும் கனரக ஆயுதங்கள், டாங்கிகள் சகிதமாகவே பிரவேசித்தது உண்மையில் அதன் உள்ளடக்கம் இலங்கையில் ஒரு தீர்வை ஏற்படுத்தினாலும் அதனை மேற்பார்வை செய்தல் என்ற பெயரில் நிரந்தர தளங்களை அமைப்பதுதான். அடிப்படையில் அன்றைய உலக ஒழுங்கில் இலங்கையை தனது இராணுவ, பொருளாதார தளமாக மாற்றிக் கொள்ளும் நோக்கில்தான் இந்தியா செயலாற்றியது என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது. இதனை நன்கு விளங்கிக் கொண்ட சிங்களம் புலிகளின் உதவியுடன் இந்தியாவை வெளியேற்றியது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இது ஓரு இராணுவ-புலானாய்வு ரீதியான பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. விடுதலைப்புலிகள்-பிரேமதாஸா உடன்பாட்டின் கீழ் இலங்கையிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கக்கட்ட இந்தியா நீண்டகாலமாக இலங்கை அரசியல் தொடர்பில் ஒரு விதமான தலையிடாக் கொள்கையை கடைப்பிடிப்பதாகவே காட்டிக் கொண்டது. விடுதலைப்புலிகளும் சிங்கள ஆட்சியாளர்களும் இணைந்தே இந்திய வெளியேற்றத்திற்கான சூழலை உருவாக்கியிருந்தாலும், தனது தந்திரோபாய தோல்விக்கான பிரதான சக்தியாக விடுதலைப்புலிகளையே இந்தியா கருதியது. நமது தரப்பிலும் உலகின் நான்காவது இராணுவத்தை தோற்கடித்த பெருமைக்குரியவர்கள் என்ற வகையான பெருமித அரசியலே முன்னெடுக்கப்பட்டது. இறுதியில் விடுதலைப்புலி - இந்திய முரண்பாடு என்பது ஒர் இந்திய எதிர்ப்பு அரசியலாகவே ஈழத் தமிழர்களுக்குள் வளர்ந்தது.


ஆனால் இன்று ஒரு பாரிய வீழ்சியை சந்தித்திருக்கும் நாம் இலட்சிய அரசியல் பற்றி சிந்திப்பதா அல்லது உலக, பிராந்திய அரசியலை விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப நடைமுறைச் சாத்தியமான அரசியல் பற்றி சிந்திப்பதா, எது சரியானது? அமெரிக்கா இந்தியாவுடன் கைகோர்த்து நிற்கும் இன்றைய அரசியல் சூழலில் நமது இந்திய எதிர்ப்பு அரசியலின் சாத்தியப்பாடென்ன? கொழும்பு சீனாவுடன் அதிகம் நெருங்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் அமெரிக்க- இந்திய கூட்டு நலன்களுடன் நமது நலன்களும் இணைந்து செல்வதற்கான வாய்புக்கள் இருக்கின்றனவா? இந்தியாவும் கொழும்பும் முரண்படும் சந்தர்ப்பங்களை கையாள வேண்டுமாயின் அது இந்தியா குறித்த நமது முன்னைய நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து கொள்ளாமல் சாத்தியமாகுமா? இந்தியாவை எதிர்த்துக் கொண்டு அதன் மூலோபாய கூட்டாளியான அமெரிக்காவை நமது நலன்களுக்கு ஏற்ப அணுக முடியுமா?

இப்படியான கேள்விகளுக்கான விடைகளை நாம் தேட வேண்டியிருக்கிறது. இப்படியான கேள்விகளை முன்னிறுத்தி நாம் உரையாட வேண்டியிருக்கிறது. இன்றைய சூழலில் உணர்ச்சிகரமான அரசியலுக்கு இடம் கொடுக்காமல் நிலைமைகளை துல்லியமாக மதிப்பிட்டு அதற்கு ஏற்ப காய்களை நகர்த்த வேண்டியிருக்கிறது. அதற்கு நாம் முதலில் பரந்தளவில் உரையாட வேண்டியிருக்கிறது. இன்றைய நிலைமைகள் குறித்து நாம் நடைமுறைச் சாத்தியமான வகையில் சிந்திக்காவிட்டால் நாம் மேலும் தனிமைப்படும் ஆபத்தே நேரிடும். இன்று சிறிலங்கா அரசுக்கு எதிராக திரும்பியிருக்கும் மேற்கின் கரிசனையைக் கூட நாம் இழக்க நேரிடலாம்.

re: இந்திய எதிர்ப்பு அரசியலும் ஈழத் தமிழர் போராட்டமும் - பிரம்மா

Thursday, October 08, 2009 12:06:30 AM amalan

நாம் ஒரு தேசமாக பலமாக இருக்கும் காலகட்டத்தில் இவ்வாறு சிந்திப்பது சாத்தியமானது. ஊதாரணமாக முள்ளிவாய்க்கால் முன்பு இப்படி யோசிப்பதில் தவறு இல்லை. ஆனால் இன்று நமது தமிழ் தேசம் இருக்கும் மிகமோசமான பலவீன நிலையில் எந்த ஒரு பேரம் பேசலுக்கும் செல்லமுடியாது. செல்லவும் கூடாது. எனவே நாம் ஒரு தேசமாக எப்படியான பாதையினை தெரிவுசெய்யவேன்டும் என்று விவாதிப்பது பயனற்றது என்பது எனது கருத்து. நாம் இப்போது செய்யவேன்டியது இந்த அடிமட்ட நிலையில் இருந்து மீண்டுவருவது தான். இதனை இன்றுள்ள நிலையில் தேசிய ஆதரவு சக்திகள் கலந்து பேசி ஒரு நிலைப்பாடுடன் மீண்டு எழுப்புவது என்பது நடைமுறை சாத்தியம் இல்லை. எனவே சமுகத்தில் உள்ள பல்வேறு சக்திகள் தாம் நம்பும் பல்வேறு கோட்பாடுகளின் உதவியுடன் முதலில் பன்முக தன்மையினை ஏற்றுகொன்டு பலம் அடையட்டும். அல்லது சேதகட்டுபாட்டினை (Damage Control) செய்து கொள்ளட்டும். காலவேட்டத்தில் தமிழ் தேசம் மீண்டும் பலம் பெறும் அப்போது தேசிய சக்திகள் தமக்குள் ஒரு ஐக்கிய முன்னனி அமைத்து எதிரியுடனும், சர்வதேசத்துடனனும் பேரம் பேசல்களை நடாத்துவது பற்றி ஒரு பொது உடன்பாட்டுக்கு வரமுடியம். அது வரை நாம் என்ன தான் அலட்டிக்கொண்டாலும் ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வரமுடியாது. அது நடைமுறை சாத்தியம் இல்லை. தவிர எதிரியும், சாவதேசமும் தனிதனியே தான் தமிழ் சக்திகளுடன் உறவுகளை வைத்திருக்கும். அதனைதான் நமது தமிழ் தரப்பும் செய்யவிரும்பும், செய்யும். இதனை விமர்சிப்பதற்கு தகுதி உள்ள தமிழ் தரப்பு என்று ஏதுவும் இல்லை இப்போதைக்கு. முதலில் அவர்கள் தமது பலத்தினை நிரூபிக்கவேன்டும். அதுவரை ஆயிரம் கட்சிகள், அமைப்புகள் உருவாகட்டும் வளரட்டும். தமிழ் தேசம் தமது பொருளாதார, அரசியல், இராணுவ பின்னடைவுகளில் இருந்து மீள்வதற்கும், அவரவர் தாம் விருப்பிய வழிகளில் செயல்படுவோம்.


Comments are closed on this post.