இலங்கை அகதி முகாம் நிலவரம் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன – சர்வதேச மன்னிப்புச் சபை 

Posted by நிலவன் Thursday, September 24, 2009 12:32:40 PM
Rate this Content 0 Votes

இலங்கை அகதி முகாம்களின் நிலைமை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
 
வவுனியாவில் உள்ள பாடசாலையொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கும், இராணுவப் படையினருக்கும் இடையில் நேற்றைய தினம் கைகலப்பு ஏற்பட்டது.
 
இந்த கைகலப்பில் ஒருவர் உயிரிழந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், குறித்த நபர் படுகாயமடைந்து வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த சிறி சந்திரமோகன் என்ற நபரே இந்த மோதலின் போது படுகாயமடைந்துள்ளார்.
 
சட்டவிரோதமான முறையில் அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமை பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிகோலும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய வலய பணிப்பாளர் ஸாம் ஸர்பாரி தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் அகதி முகாம்களில் மக்களுக்கு போதியளவு பாதுகாப்பு அற்ற நிலைமையே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச் சாட்டின் பேரில் பூந்தோட்டம் ஆசிரியர் பயிற்சி சாலையில் சுமார் 12000 தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர்களுக்கும், இராணுவ மற்றும் துணை இராணுவக் குழுக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புளொட், ரெலோ, ஈ.பி.டி.பி. மற்றும் ரீ.எம்.வீ.பி. உள்ளிட்ட கட்சிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த மே மாதம் 25ம் திகதி 9000 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவித்திருந்தார்.
 
பின்னர், தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் கைது செய்யப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்து வருகின்றது.
 
பெரும்பாலான அகதிகள் எவ்வித வெளித்தொடர்பும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கில் சுமார் 10 சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் காணப்படுவதாகவும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான தடுப்பு முகாம்களும் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
 
குறித்த தடுப்பு முகாம்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கூட பிரவேசிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், மருத்துவ வசதிகளோ அல்லது பதிவு செய்யப்படும் நடைமுறையோ இந்த அகதி முகாம்களில் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை கண்டறியும் நடவடிக்கைகள் வெளிப்படையானதாகவும், மனித உரிமை நியமங்களுக்கு அமைவானதாகவும் இருக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
 
அகதி முகாம்களில் உள்ள விடுதலைப் புலிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபைத் தெரிவித்துள்ளது.

தமிழாக்கம் GTN

Comments are closed on this post.